Sunday 15 November 2009

ஹஜ்..!

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக ..

மையத்தாய் சாய்ந்து
உம்மத்து படுத்திருக்க
மீண்டும் எழுகிறது
அந்த
மகத்துவ தல்பிய்யா கோஷம்...

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக ..

வைகறையை விழுங்கி விட
குப்ரின் இருள்
இங்கு
காத்துக் கிடக்கிறது.

கஃபாவைச் சுற்றிச் சுற்றியே
சுலோகம் இசைத்து
சுழன்று நிற்கிறது
ஹாஜிகள் கூட்டம்.

நம்ரூதின் நெருப்பு வாய்க்கு
விலங்கு போட்டது
தௌஹீதின் வரலாறு!
அது
குப்ரின் நெருப்புக் குண்டத்தை
குளிர வைத்தது

தௌஹீத்
இப்ராஹீம் நபியின் தூதை
மிளிர வைத்தது.

குப்ரை அழிக்க
குடும்பத்தையே விலைகொடுத்த
கண்ணிய மனிதர்
இப்றாஹீம் நபி!

அந்த
உயரி தியாகத்தை
உணர்த்தத் தான்....

ஈமானிய
உள்ளத்துள் பதிக்கத்தான்

மீண்டும் மீண்டும்
மலர்கிறது
மகத்தானஇந்த கோஷம்!

ஹிஜாஸ் !
அந்த அரபு பூமி
பாவம் மட்டுமே முளைத்திருந்த
புல் முளைக்காத பாலை பூமி!

அது
நெருப்பிற்கும் தண்ணீருக்கும்
உள்ள தொடர்பை
உலக மாந்தர்க்கு சொன்ன பூபி!

நம்ரூதின் அக்கிரம குப்ரின்
நெருப்பிற்கு
எதிர்மறையாய்
ஸம் ஸம் நீரைத் தந்த பூமி!

குப்ரின் நெருப்பை அணைக்க
குர்ஆனை தண்ணீராய் தந்த பூமி!

ஹிஜாஸ் எங்கள் இதய பூமி!
அந்த பூமியில்
இன்னும்...
இன்றும் ஒலிக்கிறது

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக ..

மையத்தாய் சாய்ந்து
உம்மத்து படுத்திருக்க
மீண்டும் எழுகிறது
அந்த
மகத்துவ கோஷம்...

பார்த்தீர்களா?

நெருப்பாலும் தண்ணீராலும்
பாடம் பெற்ற ஒரு குடும்பத்தின்
கதையைத்தான்
கஃபா சொல்கிறது.

இப்றாஹீம் நபியின்
இறைத் தூதுக்கு எதிராக
அடிமைத்துவம்
ஆக்கிரமிப்பு ஆதிக்கம் எல்லாம்
நெருப்பாய் உருவாக..

அடிமைப் பெண்ணான
அன்னை ஹாஜரா
ஸபா மர்வாவுக்கிடையில
ஓடி தண்ணீரைக் கண்டெடுத்தாh;.

கஃபாவின் தரிசனம்

இந்த தியாகத்தின் பாரத்தில்
கனதியைச் சேர்த்தது.
இஸ்லாத்தின் ஈரத்தை
காயாமல் பார்த்தது.

நம்ரூதின் நெருப்பும்
ஸம் ஸம் தண்ணீரும
முரண்பாடாய் முளைத்தது.

ஏகத்துவத்தின் முகவரியாய்
இதுவொன்றே நிலைத்தது.

ஹாஜிகளே நீங்கள்தரிசித்த
கஃபா ஆலயத்தில்
எதைத்தான் பார்த்தீர்கள்?

இப்றாஹீம் நபியின் சோதனையை
அன்னை ஹாஜராவின் வேதனையை
பார்த்தீரா?

குழந்தை இஸ்மாயீலின்
கதறல்களைக் கேட்டீரா?

வெறும் சடங்காய் ஹஜ் கடமை
அரங்கேறும் அவலத்துள்
ஹஜ்ஜின் உயிரோட்டம்
அழிந்து போய் விடுமே!

அதிகாரம்,
ஆதிபத்தியம்,
அடக்குமுறை,
ஆசை, கோபம், பொறாமை என்ற
ஷைத்தானை இதயத்துள்
பாதுகாப்பாய் வைத்து விட்டு
ஜம்ரத்தில் கல்லெடுத்து
ஆய்வதால்
ஹஜ் கடமை நீங்கிடுமா?

சொல்லுங்கள்.

சொத்து சுகங்களை
பிள்ளைகளை
பண வளங்களை பெட்டிகளில்
பூட்டி விட்டு
வெறும் பிராணியை
அறுப்பதால் மட்டும்
தியாகம் உயிர்பெறுமா?

சொல்லுங்கள்

இஹ்ராம் அணிகையிலே
ஆசை பாசம் அத்தனையும்
துறந்து
கபன் ஆடை தரித்தோம் என்று
சிந்தையிலே வர வில்லையென்றால்

சிறந்த ஹஜ் அது என்று
சொல்வதற்கு வாய் வருமா?

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லா ஷரீக்க லக ..

மையத்தாய் சாய்ந்து
உம்மத்து படுத்திருக்க
மீண்டும் எழுகிறது
அந்த
மகத்துவ தல்பிய்யாகோஷம்...

பார்த்தீர்களா?
நெருப்பாலும் தண்ணீராலும்
பாடம் பெற்ற ஒரு குடும்பத்தின்
கதையைத்தான்
கஃபா சொல்கிறது.

ஹாஜிகளே!
ஆபிரிக்க முஸ்லிம்கள்
பட்டினியால் சாகிறார்கள்
உங்கள் குர்பான் உணவு
கொழுத்து
மடி கனத்தவனுக்கே செல்கிறது.

ஹாஜிகளே!
ஹஜருல் அஸ்வதை
முத்தமிட்ட உங்களுக்கு இனி
ஷைத்தானின் காற்றை
சுவாசிக்க முடியாது

இப்றாஹீம் நபியின் தியாகத்தின்
பெருநிலத்தை
தொட்டுணர்ந்த உங்களுக்கு
சிலை வடித்த ஆசர்களை
நேசர்களாய்
பற்றிடவே முடியாது

நமரூதிய மனிதர்களை
தோழர்களாய்
தேர்ந்திடவே முடியாது.

உதயத்தின் எஜமானனிடம்
இதயத்தில் இருளை வைத்துக் கொண்டு
சம்பாஷிக்க முடியாது.

ஹாஜிகளே!
இந்த ஹஜ் பயணத்தில்
ஆசரின் கைக்கும்
இப்றாஹீம் நபியின்
கோடரிக்கு இடையிலான
உறவின் விரிசலை
நீங்கள் உணர்ந்தீரா?

ஈமானியஒளிபெற்று
இருள் களைத்து
ஏகத்துவத்தை நிலைநாட்டு
என்ற குர்ஆனின் செய்தியை
கஃபாவில் கற்றீரா?